போலீசார் என்றாலே வனப் பகுதியில் வாழும் மலைவாசிகள் மத்தியில் ஒரு வித அச்சம் இருக்கும் அப்படியொரு காலமெல்லாம் இருந்தது. அப்படிபட்ட மக்களின் பயத்தை போக்கி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமல்ல உங்களுக்கு உதவும் ஊழியர்களாகவும் நாங்கள் செயல்படுவோம் என மலை பகுதி மக்களுக்கு நற்செயலை செய்யும் காவல் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஈரோட்டின் இளம் எஸ்.பி.யான டாக்டர் சசிமோகன் ஐ.பி.எஸ், எடுத்த நடவடிக்கை மலை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அந்தியூர் மலை காடுகள், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் மலை பகுதி என பரந்து விரிந்துள்ளது. ஏறக்குறைய இந்த மலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். சசிமோகன் மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்ற இந்த ஒரு மாதத்திற்குள் மூன்று முறை மலை கிராமங்களுக்கு சென்று மலை வாழ் மக்களுக்கு அரசு சார்பான நல உதவிகளை வழங்கியும், அவர்களுடன் நெருங்கி பழகியும் வருகிறார்.
10ம் தேதி காலை 11.00 மணிக்கு பவானிசாகர் மலை பகுதியில் உள்ள நந்திபுரம் என்ற கிராமத்தில், போலீஸ் மற்றும் பொது மக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் ஆலோசனைகளை மக்களிடம் கலந்து பேசியதோடு, மலை கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு முகாமையும் நடத்தினார். இவ்விழாவில் சத்தியமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா, பவானிசாகர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன், பவானிசாகர் வனசரகர் சிவக்குமார், மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு, மவோயிஸ்ட் நூண்ணறிவு பிரிவு, காவல் ஆளினர்கள், அப்துல்கனி மதர்ஸா, ஆகியோரோடு இஸ்லாமிய உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர். நந்திபுரம் கிராமத்தில் வசிக்கும் 23 இருளர் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர்.
வெறும் ஒரு கூட்ட நிகழ்வாக இல்லாமல் எஸ்.பி.யின் ஏற்பாட்டின்படி தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய தலா 1 சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வேட்டி, சேலை, சுடிதார், டிபன் பாக்ஸ், பாய், தலையனை, பெட்சீட் மற்றும் பிஸ்கட்டுகள் ஆகியவை 23 இருளர் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த நல உதவி பொருட்களை நு.மு.ஆ. அப்துல்கனி மதர்ஸா, இஸ்லாமிய உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஈரோடு மேக்ஸிமா பேட்டரி மற்றும் சு.ழு. சர்வீஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினார்கள்.