கள்ளக்குறிச்சி மாவட்டம், நிரைமரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (48). இவர் ஏஜெண்டுகள் மூலம் அரபு நாடுகளுக்கு, வேலைக்கு ஆட்கள் அனுப்பும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கம்பெனிக்கு, நூறு ஆட்கள் தேவை என்று, திலன் சந்திரன் என்ற ஏஜென்ட் மூலம் அங்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதற்கு இராமநாதன் ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக கேரள மாநிலம், இடைக்காட்டு வயல்செட்டி கோட்டையைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் மூலம், அப்பகுதியைச் சேர்ந்த பலரை வேலைக்கு எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், திலன் சந்திரன் என்பவர் மூலம் துபாயில் உள்ள சூப்பர் மார்க்கெட் கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதற்காக வங்கிக் கணக்கு மூலமும், நேரடியாகவும் சுமார் 42 லட்சம் ரூபாய் பணத்தை திலன் சந்திரனுக்குக் கொடுத்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட திலன் சந்திரன் 81 நபர்களுக்கு போலி விசா தயாரித்து ராமநாதனுக்கு அனுப்பியுள்ளார். இது போலி விசா என்பதை தெரிந்த கொண்ட ராமநாதன், திலன் சந்திரனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, இப்படி போலி விசா கொடுத்து ஏமாற்றலாமா என்று கேட்டபோது திலன் சந்திரன், ராமநாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ராமநாதன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் மோசடிகளில் ஈடுபட்ட திலன் சந்திரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மற்றும் மலைக்கோட்டாலம் சேர்ந்த மாயக் கண்ணன் ஆகிய மூவர் மீதும் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.