கடந்த சனிக்கிழமையன்று 'டி.என் 43' என்ற தனியார் நிறுவனம் தனது பெயரை விளம்பரப்படுத்தி உதகை மலை ரயிலை இயக்கியது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை மலை ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு உதகை செல்லும் ரயில், மீண்டும் பிற்பகல் உதகையில் இருந்து புறப்பட்டு, மேட்டுப்பாளையத்துக்கு மாலை வந்தடையும். தற்பொழுது கரோனா பெருந்தொற்று காரணமாக மலை ரயில்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. சாதாரண மக்கள் நீலகிரி மாவட்டம் செல்ல வேண்டுமென்றால், பர்லியார் மற்றும் குஞ்சப்பணை பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், தற்பொழுது சிறப்பு மலை ரயிலில் 160 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் அனுமதி பெற்று சென்றார்களா அல்லது இவர்கள் அனைவரிடத்திலும் இ-பாஸ் இருந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால், சாதாரண மக்கள் நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுலா செல்ல முடியாத நிலையில், வசதி படைத்தவர்கள் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று வர முடியும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நீலகிரி மலை ரயிலைப் பொறுத்தவரைக்கும் வாடகைக்கு விடுவது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு நிலைதான். ஆனால், அது வாடகைக்கு விடப்பட்டாலும் 'நீலகிரி மலை ரயில்' என்ற பெயரை தாங்கித்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்முறையாக இந்தப் பெரும் தொற்று காலத்தில் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய பெயரை 'டி.என் 43' என மாற்றி, முழுவதும் காவி நிறத்தில் மாற்றப்பட்டு, நீலகிரி மலை ரயில் என்ற அடையாளத்தை மறைத்து, ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது, சமூக ஆர்வலர்களிடையே ஒரு பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தற்பொழுது அனைத்தும் தனியார் மயமாகி வரக்கூடிய நிலையில், பாரம்பரியமிக்க மலை ரயிலும் தனியார்மயமாக்கும் முன்னோட்ட நிகழ்ச்சியா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மலை ரயிலைப் பொறுத்தவரை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளுக்குள் செல்லும் அழகை ரசிக்க, சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், தனியார் மூலம் கவர்ச்சிகரமான வண்ணத்தில் ரயிலின் தோற்றத்தை மாற்றி ஒவ்வொரு பெட்டியிலும் விமானத்தில் இருப்பதுபோல, பணிப்பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள். இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பொருட்களை விமானத்தில் வழங்குவதுபோல, வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இவர்களுக்கான உடையின் வண்ணம் காவி நிறத்தில் இருந்தது. அதேபோல நீலகிரி மலை ரயில் என்ற பெயர் முற்றிலும் அழிக்கப்பட்டு 'டி.என் 43' என்ற பெயர் ரயில் பெட்டிகளில் பொறிக்கப்பட்டிருந்தது. காவி மற்றும் வெள்ளை நிறத்தில் வண்ணங்கள் இருந்தது. சிறப்பு ரயிலின் கட்டணமாக மேட்டுப்பாளையத்திலிருந்து 3,000 ரூபாய் தனியார் மூலம் வசூலிக்கப்பட்டது. தனியார் இந்த ரயிலை இயக்குவதற்குக் கட்டணமாக 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர். 4 பெட்டிகளில் 180 பேர் வரை பயணிக்க அனுமதிப்பார்கள். பல்வேறு வசதிகளோடு கவர்ச்சிகரமாக, தனியார் மூலம் ரயிலை இயக்கினால் மக்களின் பார்வை, புதிய ரயில் மீது வரும். மேலும், வழக்கமாக இயக்கப்படும் ரயில் மீதான ஆர்வமும் குறைக்கப்படும். இதைப் பயன்படுத்தி மொத்த ரயிலையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தின் முன்னோட்டமாக இது இருக்குமோ? என ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில், இது குறித்து பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சேலம் ரயில்வே கோட்டம், உடனடியாக இதற்கான முழு விளக்கத்தை அளித்து மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.