கரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆகஸ்ட் 15- ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை தி.மு.க. ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்ட போதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது" என்று விமர்சித்துள்ளார்.
அதேபோல் கமல்ஹாசனின் மற்றொரு ட்விட்டர் பதிவில், "ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகஸ்டு 15- ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.