ஈரோடு முனிசிபல் காலனியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2 தவணையாக ரூ.9 ஆயிரம் வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் என கணக்கிட்டு ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுக்கப்படும். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 10 மாதங்களில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ஒரே தவணையாக 18 மாதங்களில் ரூ.15 லட்சமும், ரூ.25 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 4 தவணையாக ரூ.83 லட்சம் திருப்பி தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
இதனை நம்பி முன்னாள் ராணுவத்தினர் பலரும், அவர்களின் கீழ் பலர் பணத்தை முதலீடு செய்தனர். மக்களிடம் நம்பிக்கை பெறும் விதமாக முதல் 2 தவணைகள் மட்டும் பணத்தை கொடுத்த நிறுவனத்தினர் 2 ஆண்டாக பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஈரோடு எஸ்.பி, ஜவகர் அறிவுரைப்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முதலீட்டாளர்களின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 22 பேர் மட்டுமே ரூ.30 கோடிக்கு முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவ்வழக்கு தற்போது ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது, “இந்நிறுவனத்தின் மீது செப்டம்பர், அக்டோபர். மாதங்களில் தலா ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 22 பேர் ரூ.30 கோடிக்கு முதலீடு செய்து பணத்தை இழந்ததாக புகார் அளித்துள்ளனர். இந்நிறுவனத்தை நடத்தி வந்த ஈரோடு இடையன்காட்டு வலசை சேர்ந்த நவீன் குமார், 35. மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முத்து செல்வம், 62 ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறோம்.
இந்த மோசடியில் மேலும் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்து ஏமாற்றம் அடைந்த நுாற்றுக்கணக்கானோர் உள்ளனர். புகார்தாரர் அனைவரும் புகார் மனு அளித்தால் தான், மோசடி செய்த தொகையின் மொத்த மதிப்பு தெரிய வரும். மோசடியின் மதிப்பு பிரமிப்பூட்டுவதாக இருக்கும். இந்நிறுவனத்திடம் இருந்து 2 கார்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மோசடியின் மதிப்பு ரூ.3 கோடிக்கு மேல் சென்றால், அவ்வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறையாகும். அதன்படி இவ்வழக்கு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுகிறது” என்றனர்.