
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில்தான் மலைச்சாமி, வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். தனது உறவினர் வீட்டுத் திருமண உதவிக்காக ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டவர், வங்கியைவிட்டு வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் பணத்தை வைத்துவிட்டு, அருகிலுள்ள டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.2 லட்சம் திருடுபோய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் மலைச்சாமி புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின.
அதில் சம்பவ நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 3 பேர் மலைச்சாமியை நோட்டமிட்டுக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்டியை உடைத்து, அதில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.