சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியிலிருந்து பல்வேறு வங்கிகளுக்கு பணப் பரிமாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று மாலை சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து இரண்டு கண்டெய்னர்களில் மொத்தம் 1000 கோடி ரூபாய் பணம் விழுப்புரம் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த லாரிகளின் முன்னும் பின்னும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றுகொண்டிருந்தன.
இந்நிலையில், அந்த வாகனங்கள் சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து கிளம்பி வந்துகொண்டிருந்தது. அப்போது தாம்பரம் அருகே வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த கண்டெய்னரின் அடியிலிருந்து திடீரென புகை கசிந்தது. அதன்பின் வாகனம் நகராமல் அங்கேயே நடு ரோட்டில் நின்றது. இதனால், பின்னால் வந்த கண்டெய்னரும் அப்படியே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீஸார் சாலையில் வாகனத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக நின்றனர். பின்னர் தாம்பரம் போலீஸாருக்கும், தாம்பரம் உதவி ஆணையருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின் பழுது நீக்கும் பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் அங்கு விரைந்தனர். தொடர்ந்து அவர்கள் வந்து வாகனத்தை அருகில் இருந்த தேசிய சித்த மருத்துவ வளாகத்திற்குள் நகர்த்திச் சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் பழுது பார்க்கும் வேலை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வாகனத்தின் பழுது நீக்க முடியாததால் மீண்டும் அந்த வாகனம் இழுவை வாகனத்தின் உதவியுடன் ரிசர்வ் வங்கிக்கே எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், மற்றொரு கண்டெய்னரும் ரிசர்வ் வங்கிக்குச் சென்றது.