Skip to main content

'தமிழக உரிமையைப் பிடுங்கி எறியும் கருணையற்ற செயல்'- மு.க.ஸ்டாலின்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

cauvery management board dmk mk stalin


காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டிய “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை, மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து, ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய அரசு, தற்போது இந்த 'காவிரி ஆணையத்தையும்' தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது அநீதியானது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அ.தி.மு.க. அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்சநீதிமன்றத்தில் 14.75 டி.எம்.சி நீரைக் கோட்டைவிட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த 'காவிரி மேலாண்மை வாரியத்தையும்' கை நழுவவிட்டது. 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்து. அதன் அடிப்படையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டைச் செயல்படுத்துவதற்கு ஒரு 'வரைவுத் திட்டத்தை' ஆறு வாரத்திற்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், பல்வேறு காரணங்களைச் சொல்லி அந்தக் காவிரி இறுதி வரைவுத் திட்டத்தை மூன்று மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு தாமதம் செய்தது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நடத்திய “காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்” எழுச்சி காரணமாகவும், உச்சநீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சமாளிக்கவும், ஒருவழியாக 18.5.2018 அன்று “காவிரி வரைவுத் திட்டத்தை” அறிவித்தது மத்திய பா.ஜ.க. அரசு.

காவிரி வரைவுத் திட்டத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தில் எல்லாம் சுட்டிக்காட்டியும், அதையெல்லாம் நிராகரித்து, “அதிகாரம் பெற்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது” என்று பொய்வாதம் செய்து பொழுதைப் போக்கினார் முதலமைச்சர் பழனிசாமி.

 

 


பொம்மை அமைப்பாக அமைக்கப்பட்ட இந்தக் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் முழு நேரத் தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சித்துறையின் செயலாளரையே “பொறுப்புத் தலைவராக” நியமித்து இன்றுவரை மத்திய பா.ஜ.க. அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கி விட்டது.

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது போல், மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தடுக்கவோ, தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவோ, தமிழ்நாட்டின் நீர் உரிமையை நிலைநாட்டவோ, இந்த ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் எதுவுமே செய்யவில்லை. இந்த இரு அமைப்புகளும் கூடிக் கலையும் அமைப்புகளாகவே இன்றுவரை இருந்து வருகின்றன.

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைக் காவு கொடுத்து விட்டு, இந்த உரிமைப் பறிப்பு வைபவங்களை எல்லாம் ஒய்யாரமாக அனுமதித்து மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பக்கபலமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு.

 


வெறும் எலும்புக்கூடு அமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு இதுவரை 20- க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி விட்டது. ஆனால், இந்தக் குழுவின் எந்த முடிவையும் கர்நாடக அரசும் மதிக்கவில்லை; உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி மத்திய பா.ஜ.க. அரசும் உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை.

கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நடுவர் மன்றத்தை அமைத்துக் கொடுத்து- வலுவான வாதங்கள் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைத் தமிழகம் பெற்றும் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீர் என்ற மன்னிக்க முடியாத துரோகத்தைத் தமிழ்நாட்டிற்கு மத்திய பா.ஜ.க. அரசு முன்மொழிய அதை வழிமொழிந்து விவசாயிகளையும், வேளாண் தொழிலையும் வஞ்சித்து கை கட்டி நிற்கிறார் 'விவசாயி' புகழ் முதலமைச்சர் பழனிசாமி.

தமிழக காவிரி நதிநீர் உரிமையை ஒவ்வொரு கட்டமாக விட்டுக் கொடுத்து- நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றின் பயன்களைத் தமிழக விவசாயிகள் அனுபவிக்க விடாமல் செய்த குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது.

இது போதாது என்று, இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து- அது தன்னாட்சி அமைப்பு அல்ல- மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட கைகட்டி நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல். காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல்.

 

http://onelink.to/nknapp



ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பிறப்பிக்கப்பட்டுள்ள 24.4.2020- ஆம் தேதியிட்ட அரசிதழை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் பழனிசாமி உடனடியாகத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜல்லிக்கட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்” - முதல்வருக்கு அமீர் கோரிக்கை

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
ameer request to cm stalin ragards jallikattu

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக அளவில் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கக் காசு, கார், பைக், பிளாஸ்டிக் பொருட்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். இது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது,  “வீரர்களுக்கு உழவுத் தொழில் தொடர்பான நடவு, களை, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பான்,அறுவடைக்கருவிகள், மாடுகள் தந்தால் அவைகளை பயன்படுத்தியும்,வாடகைகளுக்கு விட்டும் பயன் அடைவார்கள். அவ்வீரர்களின் வாழ்க்கை முன்னேற்றம் காணும் விதமான இது போன்ற பரிசினைத் தந்து தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்” என தமிழக அரசை கேட்டு கொண்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, அமீரும் முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டோடு சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில், தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..’என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவண செய்யக் கேட்டுக் கொள்கிறேன். ‘தமிழர் வீரம் வீணாகாது - தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!’ என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

புதிய திரைப்பட நகரம் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் முதல்வருக்கு கோரிக்கை

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
producer rajan about new film city

எஸ்.ஆர். பிலிம் பேக்ட்ரி சார்பில் ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் அசோக்குமார், ராகினி திவிவேதி, ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீ உள்ளிட்டோர் முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இதை ஒரு சுமாரான படம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் இங்கே காட்சிகளை பார்த்தபோது ரிச் ஆகவே எடுத்து இருக்கிறார்கள். ஒரு மசாலா படம் குஜாலா இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் இங்கே வரவில்லை. கதாநாயகிகள் படத்தை புரமோஷன் பண்ணுவதற்காக மட்டுமல்ல, அவர்களையே புரமோஷன் பண்ணிக் கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும். வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் வரவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம். இருந்தாலும் அவர்களையும் கேட்டு இதுபோன்று தேதிகளை முடிவு செய்ய வேண்டும். 

சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் பெரிய படங்களாக மாறி இருக்கின்றன. தரமணி திரைப்பட நகரத்தை மூடியபோது சிறிய படங்கள் எல்லாம் பாண்டிச்சேரிக்கும் பெரிய படங்கள் எல்லாம் ஹைதராபாத்திற்கும் கிளம்பி சென்றனர். அதனால் அவற்றை திறக்க வேண்டும் என்று கலைஞரிடமும் கடந்த வருடம் முதல்வர் மு.க ஸ்டாலினிடமும் கோரிக்கை வைத்தேன். சமீபத்தில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின்,  பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் இதை மனதார வரவேற்கிறோம்.

கடந்த பத்து வருடங்களாகவே தமிழ் சினிமாவில் சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களுக்கு சோதனைகள், கஷ்டங்கள். வேதனைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த திரைப்பட நகர் உருவாகிவிட்டால், நிச்சயமாக தயாரிப்பு செலவில் ஒரு 40 சதவீதம் மிச்சமாகும். அந்த திரைப்பட நகருக்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விஞ்ஞான வளர்ச்சி வேண்டும். ஆனால் அது உயிரை பறிப்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். இது ஆன்லைன் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு அந்த மோகத்தில் இருக்கும் நபர்களை நல்வழிப்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.