தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாயை சன்மானமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ஸ ஆச்சாரியா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் இது குறித்து கேட்கப்பட்டது, அதற்குப் பதிலளித்த அவர், “நானும் கூறுகிறேன், அந்த சாமியாரின் தலையை வெட்டுங்கள் ரூ. 100 கோடி தருகிறேன். சாந்தமே உருவானவன் தான் சாமியார். அதை விட்டுவிட்டு நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று சொல்வது சாமியார் அல்ல; அவருக்கு பெயர் கசாப்புக் கடைக்காரர். நீங்கள் எல்லாம் சாமியாரா? ரவுடி. கருத்து தெரிவித்தால் உடன்படுகிறேன் அல்லது உடன்படவில்லை என்று கருத்தின் வழியாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது தவறானது. பிறப்பில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யார் பேசினாலும் அவர்கள் என் எதிரிதான். அது பிஜேபில எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும், நான் பயப்பட மாட்டேன்” என்றார்.