சேலத்தில் கூட்டுக்கொள்ளை, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி பெரிய புத்தூரைச் சேர்ந்தவர் சங்கர் என்கிற கவுரிசங்கர் (28). இவர், கடந்த 2017, ஆகஸ்ட் 27ம் தேதி, பெருமாம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வீட்டிற்குள், இரவில் கூட்டாளிகளுடன் புகுந்து, கத்தி முனையில் வீட்டில் இருந்த 12 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 7.89 லட்சம் ரூபாய்க்கான நிரப்பப்பட்ட காசோலைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
இந்த வழக்கில் கவுரிசங்கர் மற்றும் அவருடைய கூட்டாளிகளை இரும்பாலை காவல்துறையினர் கைது செய்தனர். பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தொடர்ந்து பலரை அரிவாளால் தாக்குதல் மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஏப். 22ம் தேதி, திருமலைகிரி வயல்காடு பகுதியில் ராஜா என்பவரை கத்தி முனையில் மிரட்டி, 4100 ரூபாயை பறித்துச்சென்ற வழக்கில் கவுரிசங்கரை கைது செய்தனர். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ரவுடி கவுரிசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்படி, கவுரிசங்கரை காவல்துறையினர் திங்கள்கிழமை (மே 9) கைது செய்தனர்.