மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதுரை - அருப்புக்கோட்டை 4 வழிச் சாலையில் வலையங்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு திருமண் மற்றும் அழகுராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை ஒரு 4 மணி அளவில், வலையன்குளம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில், பெருமாள் நகரை சேர்ந்த ஒரு கும்பல் டீ குடிக்க வந்துள்ளனர். அப்போது, திருமண் மற்றும் அழகுராஜா ஆகிய இருவரும் அதே டீ கடைக்கு, இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். கடைக்கு முன், டூவீலரை நிறுத்தியதால், பாதையை மறைத்துக்கொண்டு ஏன் வண்டிய நிறுத்துறீங்க என்று அழகுராஜாவிடம் அந்த 8 பேர் கொண்ட கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு, வாக்குவாதம், கைகலப்பான நிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். திடீரென அந்த ரவுடி கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சகோதரர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் திருமண் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், லேசான காயத்துடன் அழகுராஜா, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு, திருமண் மற்றும் அழகுராஜாவின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனால் ஆத்திரமுற்ற உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதன் பிறகு, பலத்த காயமடைந்த திருமண் மற்றும் அழகுராஜா ஆகியோரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அரிவாளால் வெட்டிய கும்பல், கஞ்சா விற்பனை செய்பவர்கள் எனவும், கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த விஷயம் காவல்துறையினருக்குத் தெரிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, டி எஸ் பி வசந்தகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததின் பேரில் சாலை மறியலைக் கைவிட்டனர்.
இந்நிலையில், சகோதரர்களை அறிவாளால் வெட்டிய கும்பல், அவர்களின் இருசக்கர வாகனத்தைச் சேதப்படுத்தி அறிவாளைக் காட்டி சாலையில் செல்பவர்களை மிரட்டும் வீடியோ காட்சி, சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.