திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் மின் இணைப்புகளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இந்த அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மீஞ்சூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் அறையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் நள்ளிரவில் பெயர்ந்து விழுந்து உள்ளன.
காலையில் வழக்கம் போல பணிக்கு வந்த மின் ஊழியர்கள் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் யாரும் இல்லாததால் படுகாயம், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பழமை வாய்ந்த சிதிலமடைந்து காணப்படும் மீஞ்சூர் மின்வாரிய அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சருக்கு மின் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்