வெளிநாட்டு சொகுசு காரான 'ரோல்ஸ் ராய்ஸுக்கு' நுழைவு வரி வசூலிக்க தடைக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து ரூபாய் 1.88 கோடிக்கு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடைக்கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி, "வரி என்பது நன்கொடை அல்ல; கட்டாய பங்களிப்பு. மேலும், நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோக்களாக இருக்கவும்" அறிவுறுத்தியிருந்தார். அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவாகவும், விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனி நீதிபதி பிறப்பித்தத் தீர்ப்பின் நகலின்றி மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அமர்வில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 19) நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டுள்ளது.