சேலத்தில் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த வழிப்பறி கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சேலம் சூரமங்கலம், கருப்பூர் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் பைபாஸ் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்தன.
கடந்த பதினைந்து நாங்களுக்கு முன்பு, பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் செல்லக்கண்ணு உள்பட 6 பேரிடம் ஒரே இரவில் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் சேலம் மாநகர, மாவட்ட காவல்துறைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியது.
கொள்ளை கும்பலை பிடிக்க காவல்துறையினர் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டனர். இது தொடர்பாக ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இதற்காக இரவு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (அக்டோபர் 20, 2018) இரவு சிறப்பு எஸ்ஐ மாரியப்பன் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் பொட்டனேரி 4 ரோடு கந்தனூர் சாலையில் ரோந்து சென்றபோது, சாலையோரம் சந்தேகத்திற்குரிய வகையில் 5 பேர் கும்பலாக ஒரு கார் அருகே நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் நெருங்குவதைக் கண்டதும் அவர்கள் காரில் ஏறி வேகமாக தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது ரோந்து போலீசார் மீது காரை ஏற்றுவதுபோல் வேகமாக வந்தனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் கற்கள் மற்றும் கையில் வைத்திருந்த லத்தி கம்புகளை கார் மீது வீசினர்.
இதையடுத்து, அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியது. போலீசார் விரட்டிச்சென்றனர். ஒருவன் கால் இடறி கீழே விழுந்தான். அவனை போலீசார் அமுக்கிப் பிடித்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த வாலிபர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ராஜூ (30) என்பது தெரிய வந்தது. காரை சோதனையிட்டதில் அதில் கத்திகள், ஸ்க்ரூடிரைவர், ஹாக்ஸா பிளேடு, கையுறை, குரங்கு குல்லா, முகமூடிகள் ஆகியவை இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நள்ளிரவு நேரங்களில் பைபாஸ் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட ராஜூவிடம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, போலீஸ்காரர் பாஸ்கர் என்பவர், கருப்பூர் சுங்கச்சாவடி வழியாக சென்ற பேருந்துகளில் ஏறி சோதனை செய்தார். அதிகாலை 3.30 மணியளவில் வந்த ஒரு பேருந்தில் ஏறி சோதனை செய்தபோது, அதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் இருந்தனர். போலீஸ்காரரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடி முயற்சித்தனர். அவர்கள் இருவரையும் போலீஸ்காரர் பாஸ்கர் மடக்கிப் பிடித்தார்.
சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பிடிபட்ட இருவரும் ஏற்கனவே போலீசில் சிக்கிய ராஜூவின் கூட்டாளிகள்தான் என்பதும், இரவு நேர வழிப்பறி குற்றங்களில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள், ஊத்தங்கரையைச் சேர்ந்த சந்திரசேகர் (25), சந்திரபிரகாஷ் (29) என்பது தெரிய வந்தது. தற்போது மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் தவிர வேறு எந்தெந்த பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் போலீஸ்காரர்களுக்கும் உயிர் ஆபத்து இருப்பதாக பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன. அதனால் இரவு ரோந்து போலீசாருக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கிய வேண்டும் என்றும் போலீசார் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.