வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னகம்மியம்பட்டு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று கட்டியிருந்துள்ளனர். அந்த தொட்டி வழியாகவே அந்த ஊரின் பொதுக்குழாய், வீட்டுக்குழாய்களுக்கு தண்ணீர் சென்றுக்கொண்டு இருந்துள்ளது.
அந்த தொட்டி பழுதாகிவிட்டதால் புதிய தொட்டி கட்ட ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ரூ.11.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட இடம் தேர்வு செய்துள்ளனர் அதிகாரிகள்.
இந்த இடத்தில் நீங்கள் கட்டினால் இந்த பகுதியில் உள்ள 10 குடும்பத்தினர் வசிக்கும் இடத்துக்கு போக வேறு வழியில்லை. அதனால் எங்களுக்கு சொந்தமான இடத்தை தருகிறோம், அங்கு தொட்டி கட்டுங்கள், தற்போது கட்டப்போவதாக சொல்லுமிடத்தை பொதுவழியாக மாற்றி தாருங்கள் என அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு தந்துள்ளனர் பாதிக்கப்படும் 10 குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
ஊரில் உள்ள மற்றொரு குரூப் இதனை ஏற்றுக்கொள்ளாமல், கடந்த வாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டுள்ளனர். சரிப்போங்க, பழைய இடத்திலேயே கட்டுகிறோம் எனச்சொல்லி அனுப்பியுள்ளனர்.
இதில் அதிருப்தியான பாதிக்கப்படும் குடும்பங்களை சேர்ந்த சிலர், மே 12ந்தேதி காலை தொட்டி கட்ட கடக்கால் எடுக்கப்பட்ட குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். நீங்க எப்படி போராட்டம் நடத்தலாம் என அதே ஊரில் உள்ள மற்றொரு கோஷ்டி போராடியவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இதனால் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுப்பற்றி ஜோலார்பேட்டை காவல்நிலையத்துக்கும், பிடிஓ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டு இடத்தில் இருந்தும் தகவல்கள் சொல்லிய வர்களிடம், இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, யாரும் ஆபிஸ் வரல. அதனால் இப்போதைக்கு வரமுடியாது எனச்சொல்லியுள்ளனர். பி.டி.ஓ அலுவலகத்தில் சொன்னதில் நியாயம்மிருக்கிறது. காவல்நிலையத்திலும் இதே பதிலை சொன்னது, தகவல் சொன்னவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதற்குள் ஊர் பெரியவர்கள் சிலர், மோதிக்கொண்ட இருதரப்பை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக வைத்துள்ளார்கள். எல்லாம் முடிந்த பின் ஒரு பைக்கில் போலிஸார் வந்து என்ன பிரச்னை என விசாரித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.