திருவண்ணாமலை நகரத்தை அடுத்த அவலூர்பேட்டை சாலையில் உள்ள சேரியங்கள் பகுதியில் வசிப்பவர் பாபு. அருணை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சனிக்கிழமை தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருவண்ணாமலை அடுத்த விழுப்புரம் மாவட்டம் மலையனூர் அடுத்த தாயனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார்.
சொந்த ஊரில் இருந்து திங்கட்கிழமை காலை தனது வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டின் வாயிற்படி கதவு திறந்திருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் பூட்டப்பட்டிருந்த அலமாரியில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகை, எல்இடி டிவி, லட்ச ரூபாய் அளவில் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து மருத்துவர் பாபு, காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். புகார் எழுதி வாங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், திருவண்ணாமலை நகரத்தை சுற்றியுள்ள நகரின் விரிவுபடுத்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி இப்படி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் திருவண்ணாமலை சுற்றியுள்ள பைப்பாஸ் சாலைகளில் இறங்கி வீட்டுக்கு செல்லும் பொதுமக்களிடமும் வழிப்பறி, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற புகார்களை கொடுக்க சென்றாலும், காவல்துறையை அணுக முடியாத நிலையே உள்ளது.
காவலர்கள் இரவு நேரங்களில் தங்களுக்கான ஏரியாக்களில் பாதுகாப்புக்கு இரவு ரோந்து வரவேண்டும். ஆனால் தினமும் இன்று இரவு பணி, ரோந்து டூட்டி கண்காணிப்பு அதிகாரி என பட்டியலை சோசியல் மீடியாவில் மாவட்ட காவல்துறையின் சோசியல் மீடியா விங் வெளியிடுகிறதே தவிர அப்படி இரவு ரோந்து செல்கிறார்களா என கண்காணிப்பதில்லை. பெரும்பாலான போலீஸார் இரவு ரோந்து, விடியற்காலை நேர ரோந்து செல்வதில்லை. கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா இல்லாத பகுதி எது?, போலீஸார் கண்டுக்கொள்ளாத பகுதி எது என்பதை அறிந்து கொண்டு சுலபமாக வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் செல்கிறார்கள் என்கின்றனர்.