ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (68).ஆடிட்டர். இவர் தனது மனைவியுடன் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்காக தேனி மாவட்டம் சென்று விட்டார். அப்போது அவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 235 பவுன் நகை, ரூ.48 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடிட்டர் சுப்பிரமணியனின் கார் டிரைவரான ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சத்யன் (34) உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி (40) பெங்களூருவில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரைக் கடந்த 20ஆம் தேதி ஈரோடு சூரம்பட்டி போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்து 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதில் நரசிம்மரெட்டி அளித்த தகவலின் பேரில் 16 பவுன் நகை மற்றும் ரூ. 22 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் மீட்டனர். இந்நிலையில் போலீஸ் காவல் விசாரணை நிறைவடைந்ததால் சூரம்பட்டி போலீசார் நரசிம்ம ரெட்டியை ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் அவரை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான 6 பேரிடம் இருந்து இதுவரை 148 பவுன் நகைகள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.