Skip to main content

தாலியைப் பறித்துச் சென்ற கொள்ளையன்; மாவு கட்டுப்போட்ட போலீஸ்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Robbery arrested in vellore

 

வேலூர் மாவட்டம், காட்பாடி மெட்டுக்குளம் செக்போஸ்ட் தெருவைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவர் கடந்த 03.07.2023 ஆம் தேதி இரவு 09.30 மணி அளவில் தனது மனைவியுடன் சினிமா பார்த்துவிட்டு இருவரும் நடந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், திலீப்குமார் மனைவியின் கழுத்தில் இருந்த சுமார் மூன்று சவரன் மதிப்புடைய தாலி, குண்டுகள் மற்றும் கால்காசுகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

 

இதுகுறித்து திலீப்குமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், காட்பாடியைச் சேர்ந்த 28 வயதான பாலா என்கிற பலராமன் என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காட்பாடி காவல் ஆய்வாளரின் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை சென்று கிண்டியில் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. 

 

கைது செய்யப்பட்ட பைக் கொள்ளையனிடமிருந்து 1.5 சவரன் தங்க நகைகள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு பைக் காட்பாடி உழவர் சந்தை பகுதியிலும், மற்ற 3 பைக்குகளை வெவ்வேறு பகுதிகளில் திருடியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பாலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, அவரது வலது கையில் மாவுக் கட்டு போடப்பட்டிருந்தது. நீதிபதி அதுகுறித்து கேட்டபோது, பாத்ரூம் சென்றபோது வழுக்கி விழுந்ததாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாலாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இதேபோல் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அருணாச்சல் நகர் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது முகக் கவசம் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, பெண் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் அனிதா புகார் அளித்தார். 

 

அதன் பேரில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அதில் மர்ம நபர்கள் இரண்டு பேர் அனிதாவின் கழுத்தில் செயின் பறித்துச் சென்றது பதிவாகி இருந்தது. அதனை வைத்து குடியாத்தம் நகர போலீசார் மர்ம நபர்களைத் தேடி வந்த நிலையில், போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொய்கை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

 

அந்த விசாரணையில், அவர்கள் வெட்டுவானம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நிரஞ்சன், 21 வயதான அவரது தம்பி நித்திஷ்குமார் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் அனிதாவின் கழுத்தில் செயின் பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் பல்வேறு குற்ற வழக்குகளில் இவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த குடியாத்தம் நகர போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்