சென்னை எம்.கே.பி. நகர் மத்திய நிழற்சாலை அப்துல்கலாம் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜோசப் செல்வராஜ். இவர் வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி தன்னுடைய மகன் அலெக்சாண்டர் என்பவருக்கு திருமணம் நடந்து. மகன், மருமகள், மற்றும் ஜோசப் செல்வராஜின் மனைவி அனைவரும் பெங்களூர் சென்றனர். ஜோசப் மட்டும் தனியாக தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார் ஜோசப். மாலையில் எதிர் வீட்டில் வசித்து வரும் லலிதா என்பவர் ஜோசப் செல்வராஜூக்கு போன் செய்து உங்களது வீட்டில் ஏதோ சத்தம் வருகிறது என்று கூறியுள்ளார். உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்கம் மற்றும் 4 வைர கம்மல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த ஜோசப் செல்வராஜ் எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்தகவலின்பேரில் அங்கு சென்ற எம்.கே.பி. நகர் போலீசார் அந்தப் பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனிடையே குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒரு கார் அந்த பகுதி முழுவதும் சுற்றி வந்தது கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்த பொழுது ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடைய கார் என்பது தெரியவந்தது.
இதனால் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் கண்டிகை பகுதி சென்று அந்த கார் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது கடந்த 2 வருடத்திற்கு முன்பு தனது காரை இடை தரகர் ஒருவர் மூலமாக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த நபருக்கு விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.
இதனால், ஆந்திரா சென்ற தனிப்படை போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சினாலும் இடைத்தரகரின் தொலைபேசி எண்ணை பெற்றுகொண்டு அவரது மூலமாக புரசைவாக்கத்தில் கார் வாங்கிய நபரின் முகவரியை பெற்று கொண்டு அங்கு சென்று பார்த்தபொழுது அந்த முகவரில் அந்த நபர் வசிக்கவில்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே அந்த நபர் குடும்பத்துடன் செங்குன்றம் அடுத்த காரோனோடை பகுதியில் குடியேறியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது இடத்திலும் ஏமாற்றமடைந்த போலீசார், அக்கம் பக்கத்தினர் கூறிய முகவரியைத் தேடி நேற்றைய தினம் ரெட்டில்ஸ் காரனோடை அருகிலுள்ள ஆத்தூர் என்ற ஊரில் சென்றபொழுது சொகுசு பங்களா கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தவறான இடத்திற்கு மீண்டும் வந்து விட்டோமோ என்று நினைத்துக்கொண்டே விசாரணை மேற்கொண்ட பொழுது, அந்த காரின் உரிமையாளர் எனக்கூறி வாலிபர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அவரிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு விசாரித்த பொழுது தனது தந்தைதான் இந்த காரை பயன்படுத்துவதாகவும், நேற்று கார் தொலைந்துவிட்டதாகவும் தெரிவித்து அதனை தேடிகொண்டு இருப்பதாகவும் கூறினார்.
இதனால் கொள்ளையர்கள் யாரேனும் காரை திருடி கொள்ளை அடித்து இருக்கலாம் என நினைத்த போலீசார் எதற்கும் தந்தையை விசாரிக்கவேண்டும் எனக்கூறியுள்ளனர். அதற்கு அவர், தந்தை தற்பொழுது இங்கு இல்லை எனக் கூறவே போலீசாருக்கு சந்தேகம் எழுத்துள்ளது. உடனே அந்த வாலிபரின் எண்ணில் இருந்து அவரது தந்தையின் செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி நீங்கள் வரவில்லை என்றால் உங்களது மகனை கைது செய்யக்கூடும் எனன்கூறியதையடுத்து அங்கு வந்த அவர், போலீஸார் விசாரித்தபோது, தான் ரியல் எஸ்டேட் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியாள்ளார்.
அதன்பிறகு போலீஸார் தங்களது ஸ்டைலில் விசாரித்ததில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் வீட்டில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் வைரக்கம்மல் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஜான்சன் ஈடுபட்டு இருந்ததும் அதன் பிறகு ஊருக்கு ஒதுக்குப்புறமாக சொகுசு பங்களா ஒன்றை வாங்கி அதில் மனைவி மற்றும் ஒரு மகள் ஒரு மகன் உடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது கரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் கடந்த எட்டு மாதங்களாக எந்தவித ரியல் எஸ்டேட் தொழிலும் சரியாக போகாததால் மீண்டும் பழையபடி காரை எடுத்துக்கொண்டு வியாசர்பாடி பகுதிக்கு வந்ததாகவும், குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்ததால் இரண்டாவது தளத்திற்கு சென்று மற்ற வீடுகளின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டு குறிப்பிட்ட வீட்டின் பூட்டை மட்டும் உடைத்து திருடி சென்றதாகவும் குற்றவாளி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.