பாமகவில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியை நிறுவி நடத்திக்கொண்டிருக்கும் தி.வேல்முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராமதாஸ் மீதும், அன்புமணி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
’’ராமதாசிடம் நான் கால்நூற்றாண்டுகாலம் இருந்தேன். அப்போது ஈழ இனப்படுகொலைக்கு எதிராக மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று சொன்னேன். நமது எம்.எல்,.ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஒரு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்கு பதிலாக கலைஞர் கையில் கொடுத்து விட்டு கதையை முடித்துவிட்டார் ராமதாஸ்.
ஈழத்தில் இருந்து ஒரு முக்கியமான அரசியல் தொடர்பாளர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர் என்னிடம், குண்டுபோட்டு கொல்லுறான். லட்சக்கணக்கான மக்கள் சாகுறாங்க. குடிக்கத்தண்ணியில்ல...ஒரு மருந்து இல்ல... கோவில்ல குண்டு போட்டுட்டான்.. ஆஸ்பிடல்ல குண்டு போட்டுட்டான்... மக்கள் கூடுற இடத்துல எல்லாம் குண்டு போடுறான்... பாதுகாக்கப்பட்ட ஜோன் என்று சொல்லி அந்த இடத்துக்கு வரச்சொல்லி குண்டு போடுறான்... ஐயா நினைச்சா கண்டிப்பா இந்த போரை நிறுத்த முடியும் என்று சொன்னார். உடனே நான் தொலைபேசியை ஐயா ராமதாசிடம் கொண்டு போய் கொடுத்து விசயத்தை சொன்னேன். உடனே அந்த தொலைபேசியை தூக்கி அடிச்சி, என் மவன் மந்திரியா இருக்குறது உனக்கு பிடிக்கலயா...நாயே வெளியே போ’ன்னு சொன்னார். இன்னும் நிறைய ரணங்கள் இருக்கு. நான் உண்மையாக இருக்கிறேன். பொய்யை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை’’என்று கூறினார்.