கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த கொள்ளையனை போலீசார் கைதுசெய்து, அவரிடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சின்னசேலம் அருகில் உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான ராஜமாணிக்கம். கடந்த அக்டோபர் இவர் வீட்டில், 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சின்னசேலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். அதேபோல், சின்னசேலம் பகுதியில் உள்ள எலவடி, பூண்டி, அம்மையகரம் உட்பட பல கிராமங்களில் வீடுபுகுந்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியில் காவல் நிலையங்களை ஆய்வு செய்வதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன், கள்ளக்குறிச்சிக்கு வருகைதந்தார். அப்போது இப்பகுதியில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடந்துவருவது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாக தனிப்படை அமைத்து, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்குமாறு கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராமநாதனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சின்னசேலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியதாஸ், முருகன், மனோகரன் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படை போலீசார், கொள்ளைப்போன பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்தனர். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று மூங்கில் பாடி பஸ் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தனர். அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் கூறியதன் அடிப்படையில் அவரை காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, அம்மா பாளையத்தைச் சேர்ந்த 25 வயது வெங்கடேசன் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், சின்னசேலம் அருகில் உள்ள மேலூரில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கம் வீடு மற்றும் ராயப்பனூர், அம்மையகரம், தியாகதுருவம், கீழ்குப்பம் உட்பட அப்பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 46 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கொள்ளையன் வெங்கடேசன்மீது சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் (திருட்டு வழக்குகளில்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. பிரபல கொள்ளையனை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 45 சவரன் நகையைப் பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் டி.எஸ்.பி. இராமநாதன் ஆகியோர் பாராட்டினர்.