தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் காரணமாக, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கீழ்காணும் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூன் 6ஆம் தேதி நடக்கவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிப் பதவிக்கான தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி நடக்கவிருந்த ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், டேராடூன் ராணுவக் கல்லூரியில் 2022ஆம் பருவத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 21ஆம் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.