கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் உள்ளது திம்மலை. இந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கண்ணன் (55) என்பவருக்கு நேற்று முன்தினம் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா, காயத்திரி, கவிதா உள்ளிட்டவர்களுக்கும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட நபர்கள், தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பிறகு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 40 பேருக்கு அடுத்தடுத்து தொடர்ந்து வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது பற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இதையடுத்து சுகாதாரப் பணியாளர்கள் கிராம மக்கள் பயன்படுத்தும் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அவ்வூர் மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் கிராமத்தின் அடிப்படை தேவைகளை கிராம ஊராட்சி செய்து தரவில்லை. கிராம ஊராட்சி செயலாளர் மக்களுக்கான திட்டப் பணிகளை செய்வதில்லை. எங்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. கிராமத் தெருக்களில் கழிவுநீர் வெளியேறுவதில்லை. இதனால் மக்களுக்கு நோய்ப் பரவல் ஏற்படுகிறது. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டினர்.
திம்மலை கிராம மக்கள் போராட்டம் நடத்துவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் கிரண்குராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் நேரடியாக அந்த கிராமத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாகச் செய்து கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.