Skip to main content

சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ்; விமான நிலையத்தில் சுற்றி வளைத்த அதிகாரிகள்

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
RK Suresh who returned to Chennai was interrogated by the resident authorities

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, ராஜா உள்ளிட்ட 11 பேர் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே. சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் தனக்குத் தெரிந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களுக்கு உதவியும் வந்ததாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆர்.கே. சுரேஷ் ஆஜர் ஆகவில்லை.

அதே சமயத்தில் ஆர்.கே. சுரேஷ் தரப்பில், சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் தலைமறைவாக இருந்து வரும் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, ஆர்.கே.சுரேஷ் தான் சென்னைக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகும் வரை தன்னை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், டிசம்பர் 12 ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அதுவரை அவரை கைது செய்ய கூடாது என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை துபாயில் தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்ததால் குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் ஆர்.கே சுரேஷை பிடித்து விசாரணை செய்தனர். பின்பு இந்த வழக்கின் விசாரணைக்குதான் நான் வந்திருக்கிறேன் என்று ஆர்,கே.சுரேஷ் கூறியதால் அவரை குடியுரிமை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்