புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ச்சிப் பாதையிலிருந்த இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் சமீப காலமாக சின்ன சின்ன சலசலப்புகளால் பலர் ஒதுங்கியும், பலர் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒதுங்கும் பலர் இணைந்து மற்ற கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்களையும் இணைத்து ‘இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி’ யைத் தொடங்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் தலைமையில் சொர்ணக்குமார் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் எதிர்வரும் 25ம் தேதி நகர்மன்றம் அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு தெற்கு 4ம் வீதி கே.எம் மகாலில் கே.ஆர்.சுப்பையா நினைவு அரங்கில் முதல் மாவட்ட மாநாடு நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ராமச்சந்திரன் கூறும்போது, “கடந்த காலங்களில் பெரிய பெரிய தலைவர்களால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வளர்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய தலைமையால் கட்சி தேய்கிறது. சர்வாதிகாரப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கானோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் மார்க்சிஸ்ட் கட்சி உட்பட மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து வரும் தோழர்களை இணைத்து புதுக்கோட்டையில் எதிர்வரும் 25ம் தேதி ‘இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்’ என்ற கட்சியை தலைவர் பாஸ்கரன் தலைமையில் புதிய மாவட்ட கிளை தொடங்கி மாவட்ட மாநாடு நடத்துகிறோம். எங்கள் முதல் மாவட்ட மாநாடு முடிந்ததும் ஏராளமானோர் கட்சியில் இணைவார்கள்” என்றார்.