“கைதிகள் கலவரத்துக்குப் பின்னும் மதுரை மத்திய சிறைச்சாலை இன்னும் திருந்தியபாடில்லை..” என்று ‘உச்’ கொட்டுகிறார்கள் அச்சிறை வட்டாரத்தில்.
என்ன வருத்தமாம்?
மதுரை மத்திய சிறைக்குள் கண்காணிப்பு கேமராவை உடைத்தும், குழாய், தண்ணீர் தொட்டிகளை சேதப்படுத்தியும். விசாரணைக் கைதிகளின் பிளாக் 2 மற்றும் 3-ல் உள்ள கைதிகள், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். சிறைக்குள் நடந்த கலவரம் என்பதால், சிறை கண்காணிப்பாளரோ, சிறை வார்டனோதான், காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். ஆனால், சிறை புறக்காவல்நிலைய ஏட்டு பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில்தான் கரிமேடு காவல்நிலையம், அடையாளம் தெரியாத கைதிகள் என 25 பேர் மீது, அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, சிறை விதிமுறைகளை மீறினார்கள் என்று 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. சிறைக்கு வெளியே கேட்டில் இருந்த போலீஸ் ஏட்டுக்கு, சிறைக்குள் நடந்த கலவரம் குறித்து என்ன தெரியும்? அவர் எந்த அடிப்படையில் புகார் கொடுத்தார்?
மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர்தான், மதுரை மத்திய சிறைக்குள் இரவிலும் விசாரணை நடத்தினார்கள். சட்ட ரீதியாக உதவுகிறோம் என, யாரோ தந்த ஆலோசனையை அப்படியே ஏற்று, மதுரை மத்திய சிறை தரப்பில் கலவரம் குறித்து புகார் அளிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில், மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் சிறைக்கலவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு, சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா செல்ல வேண்டியதாயிற்று. இந்தச் சூழ்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர்.கூட பதிவாகாமல் இருந்தால் சிறை அதிகாரிகளுக்குச் சிக்கல் வரும் என்பதால், ஓ.பி. ஏட்டு பாலசுப்பிரமணியனை புகார் கொடுக்க வைத்து, முதல் தகவல் அறிக்கையை கரிமேடு காவல் நிலையம் பதிவு செய்திருக்கிறது. ஏனென்றால், சிறை புறக்காவல் நிலையம் நேரடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியாது.
மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரனை தொடர்புகொண்டோம். “சிறையில் கலவரமே நடக்கவில்லை.” என்று ஒரே போடாகப் போட்ட அவர் “ஆமா.. எங்க போலீஸ்காரர்தான் புகார் கொடுத்திருக்கிறார். பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நான்கூட எப்.ஐ.ஆர். போடலாம். பப்ளிக் புகார் கொடுத்தாலும் எப்.ஐ.ஆர். போடலாம். ஜெயிலில் நடக்கின்ற சம்பவங்களை எங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தானே ஏட்டு அங்கே புறக்காவல் பணியில் இருக்கிறார். அன்றைக்கு நடந்த சம்பவத்துக்கு ஜெயிலில் இருந்து பெட்டிஷன் வரல. கைதிகள் பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணுனதுனால, நாங்களே எப்.ஐ.ஆர். போட்டுக்கிட்டோம். சிறைத்துறை எஸ்.பி., வார்டனெல்லாம், விசாரணை முடிந்ததற்குப் பிறகு, யார் யாரெல்லாம் அக்யூஸ்ட்ன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டு, நீதிமன்றம் போயிட்டு, அப்புறம் விசாரணைக்கு வருவாங்க. என்னென்ன டேமேஜ்னு ஜெயில் சம்பந்தப்பட்டவங்க ரிப்போர்ட் கொடுப்பாங்க. அதுக்கு தனி எப்.ஐ.ஆர். போடுவோம். அந்த நேரத்துல, இப்ப போட்டிருக்கிற எப்.ஐ.ஆரை திரும்பப் பெறுவோம். அவங்க எப்.ஐ.ஆரை வச்சு வழக்கை நடத்துவோம்.” என்று ‘தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல’ விளக்கம் தந்தார்.
“கலவரம் செய்த கைதிகளுக்குச் சாதகமாக சிறைத்துறை அதிகாரிகள் செயல்படுவதும் சிறைத்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் தமிழக காவல்துறை செயல்படுவதும் கண்கூடாகத் தெரிகிறது. கலவரத்தின் அதிகபட்ச நடவடிக்கை என்பது, ஒழுங்கீனமாக நடந்துகொண்ட கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாகத்தான் இருக்கும்.” என, சிறைவட்டாரத்தில் நல்லுள்ளம் கொண்டவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.