Skip to main content

இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவை பெற தாய்க்கு உரிமை; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

Right of mother to arrears of maintenance of deceased daughter; High Court judgment

 

இறந்து போன மகளின் ஜீவனாம்ச நிலுவைத் தொகையைப் பெற அவரது தாய்க்கு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.   

 

மதுராந்தகத்தைச் சேர்ந்த அண்ணாதுரை சரஸ்வதி தம்பதி தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2005 ஆம் ஆண்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்து விவாகரத்தும் பெற்றனர். இதில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு சரஸ்வதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுராந்தக நீதிமன்றம் மாதம் ரூ.7500 வீதம் கடந்த 2014 ஆண்டு முதல் வழங்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. 

 

இந்த உத்தரவுப்படி ஜீவனாம்சம் நிலுவைத் தொகையான ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வழங்கக் கோரி சரஸ்வதி தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்த போது 2021 ஜுன் மாதத்தில் சரஸ்வதி மரணம் அடைந்தார். சரஸ்வதி இறந்த நிலையில் ஜீவனாம்சம் கோரிய வழக்கில் தன்னை இணைக்கக்கோரி அவரது தாயார் ஜெயா மனுத்தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வழக்கில் அவரை சேர்த்துக்கொள்ள மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவினை எதிர்த்து அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இந்து வாரிசுரிமை சட்டத்தின் 15 ஆவது பிரிவின் படி மனைவி இறந்துவிட்டால் அவரது சொத்துகள் குழந்தைகளுக்கும் அதற்கு பின் கணவருக்கும் அதற்கு பின்பே பெற்றோருக்கும் வரும் என கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

இவ்வழக்கினை பொறுத்தவரை தம்பதிக்கு விவாகரத்து ஆனதால் பாக்கித் தொகையை பெற சரஸ்வதியின் தாயாருக்கு உரிமை உள்ளது என கூறி வழக்கில் ஜெயாவை இணைத்து மதுராந்தகம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்ததுடன் அண்ணாதுரை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்