Skip to main content

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமனத்தை எதிர்த்து ரேவதி கயிலைராஜன் வழக்கு

Published on 21/02/2018 | Edited on 21/02/2018
ganthi

 

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக  டாக்டர் எட்வின்ஜோ 25.4.2017-ல்  நியமனத்தை எதிர்த்து கரூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் தொடர்ந்த வழக்கை விசாரித்த  மதுரைக்கிளை தனி நீதிபதி, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து, உடனடியாக ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என செப்டம்பர் 20ல் உத்தரவிட்டார்.

 

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து  தமிழக சுகாதாரத்துறை செயலர் மேல்முறையீடு செய்தார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபால், நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு கடந்த டிசம்பர் 12ல், " மருத்துவக் கல்வி இயக்குனராக எட்வின்ஜோ நியமிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை, மருத்துவ கல்வி இயக்குனர் பணி மூப்பு பட்டியல் தொடர்பான அரசாணைகள் ரத்து செய்யப்படுகிறது. ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமனம் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் 6 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என  உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில், தற்போது, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நாராயணபாபு மருத்துவ கல்லூரி இயக்குனர் பணிக்கான கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகிறார். தமிழக மருத்துவ கல்லூரி இயக்குநர் பணியிடம் காலியாக இருப்பதாக கடந்த 22ல் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னை இயக்குனராக நியமனம் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் 6 வாரத்தில் பரிசீலிக்க கோரிய உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ரேவதி கயிலைராஜன் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

இந்த வழக்கு  நீதிபதி சிவஞானம், நீதிபதி ராமதிலகம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.   அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவுப்படி தகுதிப்பட்டியல் தயாரிக்கப்படாமல் மீண்டும் மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடம் நிரப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், முறையாக பட்டியல் தயாரிக்கப்பட்டே பணியிடம் பூர்த்தி செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மருத்துவ கல்வி இயக்குநர் பணியிடத்திற்காக தயார் செய்யப்பட்ட தகுதிப்பட்டியல் தொடர்பான அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை (நாளை) பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்