பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் இன்று முதல் தங்களுடைய விருப்ப மனுவை விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் திருச்சி உறையூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் தன்னுடைய முதல் விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார்.
மேலும் இதற்கு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டிய 25 ஆயிரம் ரூபாய் பணத்தை தன்னுடைய கடன் வங்கி அட்டை மூலம் செலுத்துவேன் என்று மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடமிருந்து வேட்பு மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் டெபாசிட் தொகையைச் செலுத்த அறிவுறுத்தினார்.
பின்னர் முதல் சுயேட்சை வேட்பாளரான ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என்று கூறிக் கொள்ளும் இந்த அரசு தேர்தல் ஆணையத்தில் மட்டும் ஏன் டிஜிட்டல் முறையை கடைப்பிடிக்கவில்லை. சாதாரண தள்ளுவண்டி கடையில் ஆரம்பித்து பெரிய கடைகள் வரை டிஜிட்டல் முறையைக் கையாளும் நிலையில் வேட்பாளர் விண்ணப்பத்திற்கு பெறப்படும் டெபாசிட் தொகையை ஏன் டிஜிட்டல் மையம் மூலம் பெறக்கூடாது. நான் என்னுடைய வங்கிக் கடன் அட்டை மூலம் பணம் செலுத்துவதற்கு தயாராக இருந்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
எனவே தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகையை வேட்பாளர்களிடமிருந்து பெறுவதற்கு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி கியூ ஆர் கோடு மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்தார்.