கடந்த 22 தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மேற்கொண்ட வேலைநிறுத்ததினால் பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.
ஆனால் அடுத்த மாதம் 11,12ஆம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வுகளும், மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வுகளும் தொடங்கவிருக்கின்ற நிலையில் கடந்த ஒன்பது நாள் போராட்டத்தால் பொது தேர்வுகளை சந்திக்க தேவையான திருப்புதல், மாதிரி தேர்வுகள் சரிவர நடக்காததால் தொடர்ந்து சனி ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவை முதன்மை கல்வி அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். மேலும் சிறப்புவகுப்புகள் காலையா, மாலையா என்ன நேரம் என்பதை தலைமை ஆசிரியர்களே நெறிமுறைபடுத்தி சிறப்புவகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வகுப்புகள் வரும் வாரம் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இருந்து தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. எக்காரணத்தை கொண்டும் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிப்படைய கூடாது என்றும் முதன்மை கல்வி அலுவலர் சார்பில் கூறப்பட்டுள்ளது.