தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டதோடு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. நேற்று சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாதது சர்ச்சையானது.
இது தொடர்பாக நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சிலர் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு காணொளி வெளியாகி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
தமிழ்நாடு அரசின் அரசாணையைப் பின்பற்றாமல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று (27.01.2022) திராவிடர் கழகத்தின் இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.