Skip to main content

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்ற நிறுவனங்களுக்கு அபராதம் 

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
fine

 

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைவிட, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த 21 நிறுவனங்கள் உட்பட, பொட்டலப் பொருள் விதிகள் பின்பற்றாத மொத்தம் 56 நிறுவனங்கள் மீது ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை அபராத நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

 

இந்த  மாதத்தில் ஈரோடு மாவட்ட  நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கடைகள், நகரங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கடைகளில் சட்டமுறை எடையளவு விதிகளின் படி கீழ் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல அதிகாரிகள் ஈரோடு, பவானி,  பெருந்துறை, கோபி மற்றும் சத்தி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆய்வில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றாத 23 நிறுவனங்கள்,  பொட்டலங்களில் குறிப்புகள் குறிக்கப்படாமல் விற்பனை செய்த 12 நிறுவனங்கள்,  அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 21 நிறுவனங்கள் என 56 நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
US Action Announcement on Sanctions on Indian companies

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது. 

Next Story

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
High Court order on Karnataka Chief Minister Siddaramaiah fined

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியின் போது, சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்தக்காரர் உடுப்பி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கும், அந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து கே.எஸ். ஈஸ்வரப்பாவை கைது செய்யவும், பதவி விலகக் கோரியும் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தற்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தின் போது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீஷித் அமர்வு முன் வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காங்கிரஸ் தலைவர்கள் அளித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு கர்நாடகா நீதிமன்றம், ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து, அவர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன்படி, முதல்வர் சித்தராமையா மார்ச் 6 ஆம் தேதியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா 11 ஆம் தேதியும், உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மார்ச் 15 ஆம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.