உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்ச இன்று (07.04.2024) முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்சவும், நேர்த்திக்கடன் செலுத்த கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உயரழுத்த பிரஷர் பம்ப் மற்றும் மின்னழுத்த மோட்டார்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில் பாரம்பரிய முறையில் தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகையாறு வரும் வரை, இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.