வன்னியர்களுக்கு 20 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, அன்புமனி ராமதாஸ் தலைமையில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக் கணக்கான பா.ம.க.வினர் கலந்துகொண்டார்கள். இதைத் தொடர்ந்து 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில், பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மனுகொடுக்க அக்கட்சி முடிவுசெய்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 363 கிராம நிர்வாக அலுவலகங்களில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பா.ம.க நிர்வாகிகள், 20 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மனு கொடுத்தனர். தொடர்ந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஈரோடு பெரியசேமூர் அ.கிராமம் கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள நிர்வாக அலுவலர் செந்தில் என்பவரிடம், முன்னாள் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.