திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இளைய நகரம் ஊராட்சியில், திமுக ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஞானவேலன் தலைமையில், டிசம்பர் 26-ஆம் தேதி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அப்பகுதி மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கிராம சபைக் கூட்டத்தில் பிரகாசம் என்பவருடைய 11 வயது மகள் ஹரிணி கூட்டத்திற்கு வந்து, ஒ.செ.ஞானவேலனிடம், தனது தாய் இறந்த நிலையில் தந்தையுடன் மிகவும் வறுமையில் வாடிவருவதாகவும், தற்போது 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6-ஆம் வகுப்பு செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளார். உடனடியாக ஒன்றியச் செயலாளர் ஞானவேலன் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியதோடு கல்வியைக் கைவிடாக்கூடாது என்றும் தொடர்ந்து நன்கு படிக்குமாறும் அறிவுறுத்தினார்.
அதேபோல் அக்கிராமத்தில் உடற்பயிற்சிக் கூடம் இல்லாமல் இளைஞர்கள் 5 கிலோமீட்டர் தூரம் சென்று உடற்பயிற்சி மேற்கொள்வதாக அளித்த மனுவின் மீது அவர்களுக்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கி, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கிகொள்ளச் சொன்னார்.
மேலும், அக்கூட்டத்தில் கிராமம் முழுவதும் விவசாய நிலங்களில் தொடர்ந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாக, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குரங்கைப் பிடிக்க வனத்துறையினர் ஒரு குரங்குக்கு 5,00 ரூபாய் பணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் வனத்துறை அதிகாரிகளைக் கண்டித்து அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.