Skip to main content

ஆளும் கட்சிகளின் ஊழல்களை மறைக்கவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - கே.பாலகிருஷ்ணன்

Published on 30/09/2018 | Edited on 01/10/2018
kb



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிறன்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இது அரசு பணத்தை எடுத்து நடத்தும் ஆளுங்கட்சி விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்.
 

 எம்ஜிஆரை முன்னிலைப் படுத்திக் கொண்டு இவர்கள் செய்யும் ஊழலை மறைக்க எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மக்கள் பணத்தை எடுத்து ஆளுங்கட்சி விழாவாக நடத்தி வருகிறார்கள்,  டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

 சிதம்பரம் பகுதியில் கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி வெள்ளநீர் அதிகமாக வந்தது இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில். பகுதியில் உள்ள 12 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கரும்பு, நெல், வாழை. போன்ற பயிர்கள் அழிந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதேபோல் நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
 

கடலூர் மாவட்டத்தில் ஐசிஐசிஐ வங்கி விவசாயிகளின் காப்பீட்டு தொகை வசூலித்து வருகிறது.  விவசாயிகள் விருப்பம்போல் காப்பீட்டு தொகையை வங்கியை தேர்வு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்க வேண்டும்.  வங்கியை விவசாயிகளிடம் குத்தகை கொடுப்பது யார்?  ஐசிஐசிஐ வங்கி விவசாயிகளின் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். வெள்ளநீர் அதிக அளவில் வந்தாலும் டெல்டாவின் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க உத்திரவாதபடுத்த வேண்டும்.
 

மேட்டூரில் தண்ணீர் குறைந்து வருகிறது தமிழக அரசு கர்நாடகாவிடம் மாதம், மாதம் பெற வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெறவில்லை. இதேபோல் தண்ணீர் குறைந்து கொண்டே சென்றால் சாகுபடி எப்போது ஆரம்பிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.  நாகை மாவட்டம் ,கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளை நிரந்தர பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.  இந்த நிலையில் டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும்.
 

 மனிதர்கள் வாழும் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதாக எந்த ஒரு தகவலும் இல்லை அப்படி செயல்படுத்தினால் மனிதர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் விவசாயிகளுக்கு மட்டும் அது பாதிப்பு அல்ல அனைத்து பொதுமக்களுக்கும் காற்று, நீர், நிலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எல்லா வகையிலும் பாதிக்கப்படும் எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது.
 

 தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கு  மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில, அரசுகள் செய்து வருகிறது.  அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அதை விடுத்து பள்ளிகளை மூடினால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  தமிழக முதல்வர் அவர் மீதுள்ள குற்றத்தை மறைக்க வேறு ஒரு குற்றத்தை கூறியது சரியானது அல்ல தற்போது தலைமைச் செயலக கட்டிடம் குறித்து வாய் திறந்த இவர் கடந்த 7 வருடங்களாக அதிமுக தான் ஆட்சி செய்துள்ளது அப்போது என்ன செய்துகொண்டு இருந்தார் என்றார். இவருடன் மாநிலக்குழு மாதவன், மாவட்டசெயற்குழு ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம்,ராஜா,முத்து, மூர்த்தி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்