காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் சிறுவர்கள் வெள்ள அபாய எச்சரிக்கைகளை மீறி ஆற்றில் குளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் டைவ் அடித்து நீச்சலடிக்கும் காட்சிகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்ட நிலையில் தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் சிறுவனை மீட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என ஒலிபெருக்கியில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்ற சிறுவன் எச்சரிக்கையை மீறி ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் நடு ஆற்றில் சிக்கிக்கொண்டான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் சிறுவனை மீட்டனர்.