உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி சுமார் 17 நாட்களாக நடைபெற்று, இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் சையது அடா செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''இந்த மீட்புப் பணி முற்றிலுமாக வெற்றி அடைந்துள்ளது. மத்திய அரசால் எடுக்கப்பட்ட ஒரு சிறப்பான மீட்புப் பணி. இதற்கு மாநில அரசு பக்க பலமாக இருந்துள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் வெளியே அழைத்து வரப்படுவார்கள். ஒரு தொழிலாளரை வெளியே அழைத்து வர 5 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து தொழிலாளர்களின் உறவினர்கள் சொந்த ஊரில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.