ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே புது குய்யனூர் பிரிவு பஸ் ஸ்டாபில் இருந்து சில அடி தொலைவில் தண்ணீர் இல்லாத சுமார் 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணறு உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் அவ்வழியாகச் சென்றபோது கிணற்றில் இருந்து ஒரு விதமான சத்தம் கேட்டு அந்த கிணற்றின் அருகே சென்று எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது அந்தக் கிணற்றிற்குள் சிறுத்தை ஒன்று உறுமியபடி படுத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவலை சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு உடனே தெரிவித்தனர்.
கிராம மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், கிணற்றில் விழுந்த விலங்கு சிறுத்தை எனவும், சிறுத்தைக்கு சுமார் 6 வயது இருக்கும் எனவும் உயரதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி பரவ, சிறுத்தையைப் பார்க்கும் ஆவலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேரம் ஆக ஆகத் தண்ணீர் இன்றி சிறுத்தை தவித்தது. முதல் கட்டமாகத் தீயணைப்புத்துறையினர் மூலம் ஏணியைக் கிணற்றில இறக்கி அதன் வழியாகச் சிறுத்தை ஏறி காட்டிற்குள் சென்றுவிடும் என முயற்சி செய்யப்பட்டது. ஆனால் சிறுத்தை அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து மேலே வராமல் உள்ளே சுற்றித் திரிந்தது. அடுத்ததாக சிறுத்தையைப் பிடிக்க, கூண்டில் கோழியைக் கட்டி இறக்கிப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அந்தக் கூண்டு சிறிதாக இருந்ததால் அதில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டியது. மீண்டும் பெரிய கூண்டு வரவழைக்கப்பட்டு அந்தக் கூண்டில் ஆட்டின் இறைச்சி மற்றும் உயிருடன் உள்ள ஒரு ஆட்டையும் கட்டி அந்தக் கூண்டை கிணற்றில் இறக்கி விட்டுக் காத்திருந்தனர்.
மே...மே... என ஆடு கத்த, சுவையான உணவு கிடைத்ததுபோல் ஆர்வமாக, ஆவேசமாக அந்த ஆட்டை ருசி பார்க்கத் துடித்த சிறுத்தை, ஆட்டைப் பிடிக்கச் சென்று அந்தக் கூண்டில் மாட்டிக்கொண்டது. வனத்துறையினர் அந்தக் கூண்டை கிரேன் உதவியுடன் கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். உணவு, தண்ணீர் இன்றி இருந்ததால் மிகவும் ஆக்ரோஷமாக சிறுத்தை காணப்பட்டது.
சிறுத்தையைப் பார்க்க ஏராளமானோர் குவிந்ததால் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். சிறுத்தையை மீட்கும் பணியில் சத்தி ரேஞ்சர் பழனிசாமி, பவானி சாகர் ரேஞ்சர் சிவக்குமார், வனவர் தீபக், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர். வனத்துறையினர் கூறும்போது, தெங்குமரஹாடா வனப்பகுதியில் மங்களப்பட்டி என்ற இடத்தில் விடுவதாகத் தெரிவித்தனர்.
அதேபோல் சிறுத்தையைத் தெங்குமரஹாடா அருகே மங்களப்பட்டியின் அடர்ந்த வனப்பகுதியில் நள்ளிரவு கொண்டு சென்று விட்டனர். கூண்டிலிருந்து வெளியே தாவிக் குதித்து காட்டுக்குள் வேகமாக மீண்டும் வனம் என்ற தனது இருப்பிடம் நோக்கி பறந்து சென்றது சிறுத்தைப் புலி.