ஐந்தறிவு கொண்ட பாலூட்டி வகை விலங்கினமான அணில், தன் பாசப் போராட்டத்தை பிள்ளையைக் காப்பற்றப் போராடியதை இந்தப் பிரபஞ்சத்திற்கு உணர்த்தியது, திரண்டிருந்த ரயில் பயணிகளை உருக வைத்துவிட்டது.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரமான சங்கரன்கோவில் நகரின் ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படும். நீண்ட நெடிய தொலைவைக் கொண்ட ரயில்வே நடை மேடையில் தகர ஷெட்டால் அமைக்கப்பட்ட மேற்கூரையின் ஒரு பகுதியில் அணில் ஒன்று கூடு கட்டி தனது பிள்ளையைp பொத்திப் பாதுகாத்து வந்தது. இச்சூழலில் வெயிலின் தாக்கம் காரணமாக இளைப்பாற நிழல் தேடி அலைந்த ஐந்தடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு (நல்ல பாம்பின் மறு வடிவம்) ரயில் நிலைய மேற்கூரையில் ஏறிப் பதுங்கியபோது அருகிலுள்ள கூட்டிலிருந்த குட்டி அணில் பிள்ளையைக் கவ்விய கணத்தில் விழுங்கியது. வயிறு முட்டல் காரணமாக நகர முடியாத அந்தப் பாம்பு மேற்கூரையின் அந்தரத்தில் தொங்கியதைக் கண்ட ரயில் பயணிகள் உடனே ரயில்வே நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே தன் பிள்ளையைக் காணாமல் தவித்த தாய் அணில், பாம்பின் வாயில் பிள்ளை சிக்கிக் கொண்டதைப் பார்த்த தவிப்பில் காப்பாற்ற வேண்டி அலை பாய்ந்தது. யாராவது உதவுங்களேன் என்ற பரிதவிப்பில் கீச்... கீச்... என்று கத்திக் கதறியபடி பதறப் பதற ஓடியது.
இந்த நிலையில் தகவலின் பேரில் அப்பகுதியின் பாம்பு பிடி நிபுணரான பரமேஷ் தாஸ் விரைந்து வந்தவர், சரசரவென மேற்கூரையில் ஏறினார். சாரைப் பாம்பை சாதுர்யமாகப் பிடித்தவர், இரைக்காக அதன் வாயில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டி அணில் பிள்ளையை உயிருடன் பத்திரமாக மீட்டவர் அதை பிளாட்பாரத்தில் விட்டபோது தவித்துக் கொண்டிருந்த தாய் அணில், மீட்கப்பட்ட தன் குட்டியைப் பாசத்தோடு சுற்றிச் சுற்றி வந்தது.
குட்டி சிக்கியதையும் தாய் அணிலின் பாசப் போராட்டத்தையும் மீட்கப்பட்ட பின் அதன் உருக்கத்தையும் கண்ட ரயில் பயணிகளின் கண்களில் அனந்தக் கண்ணீர். தாமதமின்றி செயல்பட்டு குட்டியை உயிருடன் மீட்டு ஒரு தாயின் தவிப்பைத் தணித்து சந்தோசத்தில் தாய் அணில் குதித்தோடிச் செல்ல உதவிய பரமேஷ் தாஸை, பயணிகள் மனதாரப் பாராட்டினர். ஐந்து இன்ச் நீளமுள்ள அணில் தான் என்றாலும் பிள்ளைப் பாசத்தில் சற்றும் சளைத்ததல்ல. அணிலின் இந்தப் பாசப் போர் சமூக வலைத்தளத்தில் வைரல்.