தமிழக பள்ளிக்கூடங்களில் பயிலும் ஏழை மாணவர்கள், உணவு இல்லாமல் கல்வி கற்க முடியாத நிலை இருக்கக் கூடாது என நினைத்த பெருந்தலைவர் காமராஜர், தனது ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இந்தத் திட்டம் ஒருகட்டத்தில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பரவியது.
தற்போதும் இந்தத் திட்டம் அமலில் இருக்கும் நிலையில், இத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என அகில இந்திய நாடார் கூட்டமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் சார்பில், என்.ஆர்.தனபாலன், ராஜ்குமார், பத்மநாபன் உள்ளிட்ட நாடார் சமூகத் தலைவர்கள், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியை இன்று (05.03.2021) சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்தச் சந்திப்பில், மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, அதற்கான பின்னணிகளையும் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் நாடார் சமூகத் தலைவர்கள். மேலும், ஒவ்வொரு வருடமும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரில் மத்திய அரசு விருதுகள் வழங்க வேண்டும் என்றும், சிவந்தி ஆதித்தனாரின் புகழைப் பரப்பும் நோக்கில் அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கிஷன் ரெட்டி, பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் இதுகுறித்து விவாதித்து, நல்ல முடிவை தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.