புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் நடக்கும் அதிகார யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பா.ஜ.கவின் நியமன எம்.எல்.ஏக்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் நிதி மசோதாவில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார் கிரண்பேடி. இதற்கெல்லாம் தீர்வு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என கடந்த 19-ஆம் தேதி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிக அதிகாரம், பல்கலைக்கழக மானிய குழு தொடருதல், மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இந்த தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்கும் முடிவுடன் சென்றவர்கள் முதலைமைச்சர் நாராயனசாமி தலைமையில் நேற்று மதியம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தனர். இந்த சந்திப்பில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஸ்ணாராவ், கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன், தி.மு.க எம்.எல்.ஏ சிவா, அ.தி.மு.க சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் டெல்லிக்கான பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் எம்.பிக்கள் டி.ராஜா, கனிமொழி, தம்பித்துரை, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும், மேலும் அடுத்தடுத்த நாள்களில் பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அதேசமயம் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவையில் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் டெல்லி சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. பா.ஜ.க மற்றும் கிரண்பேடியின் வெறுப்பிற்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் டெல்லி பயணத்தை தவிர்த்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.