அரசு உத்தரவுப்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கரோனா காலத்தில் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, கடலூர் மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவனை சந்தித்து மனு ஒன்று அளித்துள்ளனர். அதில், கரோனா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு அலுவலகப் பணிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உட்பட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இவ்விலக்கு மறுக்கப்படுகிறது.
இது அரசின் அறிவிப்புக்கு எதிரானது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவலகப் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். மேலும் இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி செவிலியர் ஜென்மராக்கினி கட்டாயப் பணியின் காரணமாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நோய் உள்ளிட்ட பாதிப்புக்களைக் கொண்டுள்ள மேற்படி செவிலியருக்கு சரியான மருத்துவம் கூட வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு உள்ளனர்.
மாற்றுத்திறனாளியான ஜென்மராக்கினிக்கு சிறப்பு மருத்துவக் கவனிப்பு அளித்திட வேண்டும். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் புலங்களிலும் பணியாற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவருக்கும் அரசு அறிவிப்பின்பேரில் பயணப்படி ரூ.2,500 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதனை மாற்றி ஒவ்வொரு மாத ஊதியத்துடன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.