
வேலூர், தோட்டப்பாளையம் மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் 50 வயதான வேலு. கடந்த 4ஆம் தேதி நியாயவிலைக்கடையில் பொங்கல் பணம் 2,500 ரூபாய் தருவதை வாங்கி வருவதாக தனது குடும்பத்தாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அப்படிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குடும்பத்தார் புகார் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி 11ஆம் தேதி காலை வேலூர், பாலாற்றங்கரை சுடுகாட்டில் ஒரு ஆண் சடலம் கத்தி குத்துக் காயங்களுடன், முகம் சிதைந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் வடக்கு காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைப் பார்த்துள்ளனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் வேலூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் அங்கேயே அரசு மருத்துவர்கள் உடல் கூறாய்வு செய்து, உடல் பாகங்கள் சிலவற்றை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கட்டிட மேஸ்திரியான வேலுவை யார் கொலை செய்தது? எதற்காக கொலை செய்தார்கள்? எத்தனை பேர் கொலை செய்தார்கள்? எனப் பல்வேறு கேள்விகளுடன் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.