சேலம் அருகே நடந்த கிராமசபைக் கூட்டத்தில், எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை பதிவு செய்ய மறுத்ததால், அரசுத்தரப்பு பிரதிநிதிகள், விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கிராம ஊராட்சிகளில் அரசின் அனைத்துத் திட்டங்களும் முழுமையாக சென்று சேரவும், அதை மக்கள் முன்னிலையில் சமூக தணிக்கைக்கு உட்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதல் கிராமசபைக் கூட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடந்தது.
சேலத்தை அடுத்த குள்ளம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்றத் தலைவர் கலாபிரியா பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. கிராம ஊராட்சி எழுத்தர் வடிவேல் மற்றும் சுகாதாரத்துறை, மின்வாரியம், தொடக்கக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கிராமசபைக் கூட்டம், சற்று தாமதமாக காலை 11.30 மணிக்கு மேல்தான் தொடங்கியது.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம், ஊர் பொதுமக்கள் சார்பில், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில், ''குள்ளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வந்தால், எங்கள் கிராமமே இரண்டாக பிளவுபடும்.
இத்திட்டத்தால் ஏற்கனவே உள்ள நீர்வழித்தடங்கள் அடைக்கப்படும். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, மரங்களும் வெட்டப்படுவதால் மழை வளமும் பாதிக்கப்படும். விளை நிலங்கள் அழிக்கப்படுவதால் விளை பொருள்கள் உற்பத்தி பாதிப்பதோடு, விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் வேலையிழப்பும் ஏற்படும் என்பதால் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கூட்டத்தில், குள்ளம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரான கலாபிரியா பெயரளவுக்கு அமர்ந்து இருந்தாரே தவிர, மக்களின் கேள்விகளுக்கு, நான்தான் தலைவர் என்று கலாபிரியாவின் கணவர் பழனிசாமி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு பேசினார்.
எட்டுவழிச்சாலைக்கு எதிரான மனு குறித்து, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பழனிசாமி, ''கிராமசபைக் கூட்டம் தொடர்பாக நடந்த பயிற்சி கூட்டத்தின்போது, எட்டுவழிச்சாலைக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவதால், அது தொடர்பாக எந்த தீர்மானத்தையும் பதிவு செய்யக்கூடாது என்றும், அப்படி பதிவு செய்வது கோர்ட் அவமதிப்பு செயலாகும் என்றும் அதிகாரிகள் எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். அதனால் எட்டுவழிச்சாலைக்கு எதிரான கோரிக்கை மனுவை பெறவோ, அதன்மீது தீர்மானமோ நிறைவேற்ற முடியாது,'' என்றார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவருடைய மனைவி, திரும்பவும் பன்னீர்செல்வத்திடமே கொடுத்து விட்டார்.
இதற்கு பன்னீர்செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் அவரிடமும், அரசு பிரதிநிதியான வடிவேலிடமும் வாக்குவாதம் செய்தனர். தீர்மானம் பதிவு செய்ய முடியாது என்று எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டதால், மேலும் அங்கு வாக்குவாதம் முற்றியது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு, எட்டுவழிச்சாலைக்கு எதிரான மனுவை பெற்றுக்கொண்ட பழனிசாமி, இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசிவிட்டு பதில் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகளுக்காக குள்ளம்பட்டி ஊராட்சி பொது நிதியில் இருந்து 18645 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவ்வாறான பணிகள் நடக்கவே இல்லை என்றும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டினர். குடிநீர் குழாய்களை சீரமைத்து இருந்தால், கடந்த ஓராண்டுக்கான செலவு கணக்கு ரசீதுகள் உள்ளிட்ட முழுமையான தணிக்கை கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கோரி, எழுத்தர் வடிவேலை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
ஆனால் எழுத்தர் வடிவேலோ, தீர்மானம் பதிவு செய்யும் பதிவேட்டை கையில் எடுத்துக்கொண்டு கூட்டத்தைவிட்டு வெளியேற முயற்சித்தார். அவரை செல்ல விடாமல் முற்றுகையிட்ட பொதுமக்கள், கணக்கு வழக்குகளை உடனடியாக மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த கூட்டத்திறகு வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். இந்த களேபரத்தில் ஒரு சிலர், அவரை ஒருமையிலும் வசைபாடினர்.
இதையடுத்து, உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்ட வடிவேல், கடந்த மூன்று மாதத்தில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்பதை மட்டும் தீர்மான பதிவேட்டைப் பார்த்து வாசித்துக் காட்டினார். இந்த சம்பவத்தால் கூட்டம் நடந்த பள்ளி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் களை எடுத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட வேலை வாய்ப்புகளையும் சேர்த்தல், குள்ளம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பொதுக்கழிப்பறைகள் கட்டுதல், பாலிக்காடு பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராமசபைக் கூட்டங்களில் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக பிரச்னைகள் வெடிக்கலாம் என்ற தகவலால், காரிப்பட்டி காவல்நிலைய தனிப்பிரிவு, கியூ பிரிவு, எஸ்பிசிஐடி உள்ளிட்ட உளவுப்பிரிவு காவல்துறையினரும் கூட்டத்தில் நிகழும் சம்பவங்களை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். எட்டுவழிச்சாலை அமைய உள்ள எல்லா கிராமசபைக் கூட்டங்களிலும் உளவுப்பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அதேநேரம், பூலாவாரி அக்ரஹாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ராதா, ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி ஆகியோர் தலைமையில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், எட்டுவழிச்சாலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.