இந்திய நாட்டின் 71- வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் அந்தந்த மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால், துணை சபாநாயர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் தமிழக டிஜிபி திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்துக்கொண்டனர்.
தேசியக் கொடியேற்றி வைத்த ஆளுநர் முப்படை அணி வகுப்பு, காவல்துறை, என்சிசி என 48 படை பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகளும் இடம் பெற்றது. விழாவில் காவலர் பதக்கம், அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான விருது, வேளாண் துறையின் சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.