ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார். நான்கு நாட்கள் இமயமலையில் தியானம் செய்த அவர் பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ஜெயிலர் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக்கிய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை ஒரு நல்ல படத்தை எடுங்க என ஊக்குவித்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கும், ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு ஃபிரேமும் ரசிச்சு ரசிச்சு இயக்கிய நெல்சனுக்கும், திறமையோடு வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், மூத்த நடிகர்களுக்கும், ஒரு வெற்றி படத்தை தன்னுடைய அருமையான பாடல்களாலும் பிரம்மிக்க வைக்கும் பின்னணி இசையாலும் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படமாக்கிய அனிருத்துக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்'' என்றார்.
அரசியல்வாதிகளைச் சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, “அரசியல்வாதிகளை சந்தித்தது நட்பு ரீதியானது தான்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'நீங்கள் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது சர்ச்சையானதே' என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ''ஒரு சன்னியாசி ஆகட்டும்; ஒரு யோகி ஆகட்டும் அவர்கள் வயதில் நம்மை விட சிறியவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்'' என்றார்.
தொடர்ந்து பிரதமர் குறித்து கேள்விகளை செய்தியாளர்கள் முன்னெடுக்க, ''நான் அரசியல் பேச விரும்பவில்லை'' எனப் பதிலளித்துவிட்டு கிளம்பினார்.