சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட 21-வது வார்டில் குமரன் குளம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த குளத்தை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ 81 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு செய்து குளத்தை நவீன முறையில் சீர் செய்தது. மேலும் குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் வகையில் அதற்கு ஏற்றவாறும், அமர்வதற்கு சிமெண்ட் கட்டைகள் உள்ளிட்ட வசதிகள். சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் சிறு விளையாட்டு பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.
அதேபோல் 33 வது வார்டில் பாலமான் வாய்க்கால் அருகே உள்ள குளம் இதேபோன்று ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனையும் மீட்டு ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதனை சீர்படுத்தினார். பணிகள் முடிவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே. ஆர். செந்தில்குமார் கலந்துகொண்டு குளங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், ஏ ஆர் சி மணிகண்டன், ரமேஷ், வெங்கடேசன், 21 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் தாரணி அசோக், லதா, சுதாகுமார், புகழேந்தி, திமுக நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் குமரன் குளத்தில் பொது மக்களுக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்றும், பாலமான் குளத்தில் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்தும் வகையில் படிக்கட்டுகள் மற்றும் குளத்தைச் சுற்றி மண் சரிவு ஏற்படாத வகையில் சிமெண்ட் கற்கள் பதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நகர் மன்றத்தலைவரிடன் மனு அளித்தனர். இதேபோல் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரூ.34 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.