மதுரை ஆதின மடத்தின் 293- வது ஆதினமாக நித்யானந்தா நியமனத்துக்கு தடைவிதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை ஆதீனம் மடம் 2500 ஆண்டு பழமையானது. இந்த மடத்தின் 292-வது குரு மகா சன்னிதானமாக அருணகிரி நாதர் 15.3.1980 முதல் இருந்து வருகிறார். ஆதீனம் மடத்தின் 293-வது ஆதீனமாக பிடுதி நித்தியானந்தா ஆசிரமத்தின் தலைவராக உள்ள நித்யானந்தாவை 2012 ஏப்ரல் மாதம் அருணகிரிநாதர் நியமனம் செய்தார்.
இந்நிலையில் நித்யானந்தா நியமனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி ஆதீனம் மடத்தின் பக்தர்கள் மணிவாசகம், சாமி தியாகராஜன் ஆகியோர் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். தடைக்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த மனு 22.12.2014-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா உயர் நீதிமன்ற கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில் "மதுரை ஆதீனம் மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறநிலையத்துறை சட்டப்படி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறவில்லை. இதனால் கிழமை நீதிமன்றததில் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.