நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் நிறைவடைகிறது. இந்நிலையில் ஆறு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதவிக்காலம் நிறைவடைய உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து பார்ப்போம். பொதுவாக மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.
இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் மசோதாவை கொண்டு வரும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக கொண்டு வரும் மசோதாவிற்கு "தனிநபர்" மசோதா என்ற பெயர் உள்ளது. இவர்கள் கொண்டு வரும் மசோதாக்களை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அது சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு உறுப்பினர்களும் மாநில மக்களின் நலன் மற்றும் நாட்டு மக்களின் நலன் தொடர்பாக மசோதாவை தாக்கல் செய்து, அதை வெற்றிக்கரமாக நிறைவேற்றி வருகின்றன.
ஆனால் தமிழகத்தில் தற்போது ஓய்வு பெறவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் அதிமுகவை சேர்ந்த மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் உள்ளிட்ட உறுப்பினர்களில் ஒருவர் கூட மாநிலங்களவையில் "தனிநபர்" மசோதாவை கொண்டு வந்து, அதை சட்டமாக மாற்ற முயற்சிக்கவில்லை. இதில் குறிப்பாக பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்த உறுப்பினர்களில் ஒருவர் கூட மாநிலங்களவையில் தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தவில்லை என்பது தொடர்பான அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிமுக உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலங்களில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்னெடுத்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.